43 வேகம்

ஓடு
ஒரே தாவலாய் ஏறி
உன் ’பைக்’கை எடுத்து
உன் லட்சியத்துக்கு குறுக்கே
நீ கற்பித்துள்ள கால தூரத்தை
ஒரே விழுங்கில் விழுங்கிப்
பால்யத்தில்
நீ அங்கே ஐக்யமுற்றிருந்த
அந்த நடனத்தைக் காண,
முந்தானை பற்றி நின்ற
அரை ட்ரௌசர் பையனாய்
அமர்ந்து காணப் போ…

இன்னும் சற்று நேரமேயிருக்கிறது
வேகமாய்ப் போனால்
இந்தக் கணம் முடிவதற்குள்
போய்விடலாம்

போகிற வேகத்தில்
பின் இருக்கையில் அமர்ந்து
உன்னைத் தொடர்கிற இலட்சியத்தையும்
வழியிலே உருட்டிவிட்டுத்
தன்னந்தனியாய்ப் போ!

சாலையின் இரு கரைக் காட்சிகளும்
வெள்ளையடிக்கும் மட்டையின்
ஒற்றை இழுப்பில் மறைகிற
சுவர்ச் சித்திரங்களாய்ப் பரிணமிக்க,
பால் வெளியில் சிறகு விரித்த
ஒரு கறுத்த பறவையாய்
நீ மாத்ரம் ஜனிக்க
கூட்டு உன் வேகத்தை இன்னும்…

பொந்து போலும்
ஒரு ஊற்றுக் கண்ணினின்றும்
பொங்கிக் குழைந்து அபிநயித்து
ஆடியபடி
காற்றில் இறக்கை விரித்து வரும்
ஒரு சங்கீதம்
அடிபட்ட கிரௌஞ்ச பக்ஷியாய்
கத்திச் சாக,
எதிர்ப்படும்
மாபாரதச் சோகங்களையெல்லாம்
ஒரே தள்ளாய் விலக்கிக்கொண்டு
போ…

இனி நிற்றல் என்பதே கூடாதபடி
நிறுத்தல் பற்றின நினைவே
அற்றுப்போம்படி
போ… போ

அங்கே நிருத்தம் காணக்
கூடியிருக்கும் தலைக் கடல்களை
தார்ச் சாலையாய்த் தேய்த்துக் கடந்து
உன் நிருத்த ஸெந்தரியையும்
நீ விழுங்கப் போகையில்
நிறுத்திவிட முடியாது.
போ
போய்க் கொண்டேயிரு
நீயே மறைந்து போகும்வரை

License

தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.