78 விரும்பினேன் நான் என் தந்தையே

பேயோ, தெய்வமோ
எந்த ஓர் அச்சம்
ஆட்டிப் படைத்தது உம்மை என் தந்தையே
”நீ படித்தது போதும்
எல்லோரும் மேற்படிப்புப் படித்தேகிவிட்டால்
இருக்கும் பிற வேலைகளையெல்லாம்
யார் செய்வார்?” என்றறைந்தீர்

கடும் உழைப்பை அஞ்சினேனோ?
கூட்டாகப் புரியும் பணிகளிலே-
இருக்க வேண்டிய தாளம்
இல்லாமை கண்டு அஞ்சினேனோ?

விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்துப் புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதி கொண்டு முடிவின்றி இப்புவியினை
நான் பார்த்துக்கொண்டே இருப்பதற்கும்
காலமெல்லாம் திருவிழாவும் மழலைகளின் கொண்டாட்டமுமாய்
என் வாழ்வை நான் இயற்றிடலாம் என்றெண்ணி
ஊர் ஊராய்ச் சுற்றி வரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்
மொய்க்கும் குழந்தைகளின் களங்கமின்மை நாடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்துக் காத்துக் கிடப்பதற்கும்
விரும்பினேன் நான் என் தந்தையே

வியர்வை வழிந்தோட வீதியிலும் வெயிலிலும்
உழைப்போர் நடுவே
அடுப்புக் கனலும் சுக்கு வெந்நீர்க்காரனாகி நடமாடவும்
சாதி மதம் இனம் நாடு கடந்து அலைகிற
யாத்ரீகப் புன்னகைகள் அருந்தி என் உளம் குளிர
வழிகாட்டி வேடம் தரிக்கவும்
விரும்பினேன் நான் என் தந்தையே
அன்பர் குழுக்கள் நடுவே வாத்தியமிசைக்கவும்
பாடவும் நடனமாடவும்
விரும்பினேன்

இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்
இன்று நினைத்துப் பார்க்கிறேன் உம்மை என் தந்தையே
நம்மை ஆட்டிப் படைத்த மறைபொருளின் நோக்கையும்

License

விரும்பினேன் நான் என் தந்தையே Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.