97 மாற்றப்படாத வீடு

நெருக்கடியுள் நெரிந்து அனலும் காற்று
என்ன செய்ய?
இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
பாதிக்கப்படுபவன் நான் மட்டுமே(!?)
சைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி
நகர எல்லையிலிருக்கும் என் பள்ளிக்கு
அதனருகே ஒரு வீடும் கட்டிமுடித்துள்ளேன்
குடிவர மறுக்கின்றனர் என் வீட்டார்
ரிக் ஷாச் செலவே சம்பளத்தில் பாதியாகிவிடும்
என பயமுறுத்துகிறாள் என் மனைவி
உண்மையும்தான் இதற்காகவேதான்
கல்யாணமானவுடனேயே நச்சரித்தேன்
மிதிவண்டி ஓட்டப்படி என்று.

அவளுக்கு அவள் பள்ளி பக்கம்; ஊருக்குள்ளேயே.
அப்பாவுக்கு ஆபீஸ் பக்கம்
(வயதான காலத்தில் பஸ் ஏறி இறங்க வேண்டியதில்லை)
அம்மாவுக்கு கோவில் பக்கம்; மேலும் உறவினர்கள்
(வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடையவேண்டாமா?) தம்பிதங்கைகளுக்கு அவரவர் பள்ளிகள் பக்கம்
எனவேதான்
இந்தவீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
என்றாலும்
நான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன்.

Comments are closed.