28 நோய்த் தொற்று

என்னையும் மீறி என் குரல் நடுங்கிற்று
”டாக்டர், அவர் ஒரு கவிஞர்!
சிறப்பு அக்கறை எடுத்துக் கவனிக்கவேண்டும் நீங்கள்!”

ஆம்புலன்ஸ், ஸ்ட்ரெட்சர் என வேகமாய் வந்து
படுக்கையில் துவண்டு கிடந்தார் நண்பர்!
முதல் உதவியெல்லாம் முடிந்து
பெரிய டாக்டருக்காய்க் காத்திருந்த இடைவேளையில்
சற்றுத் தெளிந்து கண் விழித்த நண்பர்
சுற்றுமுற்றும் பார்த்து மூக்கைப் பொத்தியமை கண்டு விழித்தோம்.
இடையறா அருவியின் அடித்தளம் போலன்றோ
தூய்மை கனன்றுகொண்டிருந்தது அறை!

பெரிய டாக்டர் வந்து பரிசோதனைகள் முடித்து நிமிர்ந்தார்.
கவலையும் ஆவலும் கேள்விகளுமாய்த்
துடித்துக் கொண்டிருந்த செவிகளை நோக்கி, குனிந்து,
தனது வெண்ணிறக் கையுறையணிந்த கையொன்றால்
அழுக்கேறிய பூணூலைச் சன்னமாய்த் தூக்கிக்காட்டியபடி
”இதனாலும் நோய்த் தொற்று ஆகியிருக்கலாம்” என்றார்

Comments are closed.