31 தோசை சுடுதல்

எத்தனை துக்கம்.
உன்னைச் சுற்றிக் குறுகிய அறை.
நலங்கெடுக்கும் வெப்பம்.
வெளியிலிருந்து வரும் காற்றால்
ஒருநாளும் அதைக் குறைக்க முடிந்ததில்லை

இரும்புக் கல்லின்கீழ் எரிகிறது இதயம்.
இரும்புக் கல்லின்மேல் அந்த இதயமே
வேகும் தோசையும்.
அறை வெப்பத்தால் அதிகரிக்கிறது
அதிகரிக்கிறது உன் துயர்

இத்தனைத் துயர் தாங்கியபடி
எவ்வளவு காலமாய் நீ
யாராலும் கவனிக்கப்படாமல் நிற்கிறாய்?
இன்னும் நீ எதிர்பார்க்கும் பொருள்
உன்னைத் தீண்டவில்லையா?
இன்னும் உன் நெஞ்சை வெடித்துவிடாதபடி
காத்துக் கொண்டிருப்பது எது?

சரியான நேரத்தில் உன்னைத் தட்டித்
தோசையைத் திருப்பிப் போடச் செய்தது எது?
அந்தக் கணம் முதல்
இனியதோர் ராக ஸ்வரமாய்
உன்னுள் பாடத் தொடங்கியது எது?

கொடுக்கமட்டுமே அறிந்ததாய்
உன் இதயம் மாறிவிட்டதெப்போது?

License

தோசை சுடுதல் Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.