18 சூர்யமறைவுப் பிரதேசம்

உனக்குச் சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்குச் சூரியன்
உதாரணமாய் ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒரு நண்பனின் முகம்
ஒரு குவளை தண்ணீர்
ஒரு கண்ணாடி
இன்னும்,,,
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்
என சொல்லிக்கொண்டே போகலாம்

ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லையெனில்
ஒரு பப்பாளிப்பழம்
அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையெனில்
ஒரு நண்பனின் முகம்
உன் முகத்திற்கு ஒளியேற்றவில்லையெனில்
ஒரு குவளை தண்ணீர்
உன் தாகம் தணிக்கவில்லையெனில்
ஒரு கண்ணாடி முன்
நீ புன்னகைகொள்ள இயலவில்லையெனில்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகளாய்
உனக்கு உன் வாழ்க்கை ஒருபோதும் காணப்படவில்லையெனில்
உணர்ந்துகொள்:
‘நீ இருக்குமிடம் சூர்யமறைவுப் பிரதேசம்!’

Comments are closed.