16 சிறகுகள்

வானம் விழுந்து, நீர்;
சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை

நீரில் எழுந்தது வானம்;
சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு

சிறகினுள் எழும் சூர்யத் தகிப்பே
சிறகடிப்பின் ரகசியம்; ஆகவேதான்
சுயவொளியற்ற வெறும் ஒரு பொருளை
சிறகுகள் விரும்புவதில்லை;
பூமிபோன்ற கிரகங்களை அது நோக்கவில்லை
(சிறகடிக்கையில்
சிறகின் கீழே வெட்கி ஒடுங்கிக்கொள்கின்றன
பறவையின் கூர்நகக் கால்கள்)

சூரியனுள் புகுந்து, வெறுமே
சுற்றிச் சுற்றி வருகின்றன சிறகுகள்
சிறகின் இயல்பெல்லைக்குள்
நிற்குமிடமென்று ஏதுமில்லை
வெளியில் அலையும் சிறகுகளுக்கு
இரவு பகல்களுமில்லை

Comments are closed.