54 சப்பட்டை முத்து

கடல்தான் எத்தனை அழகு!
அதன் அழகில் நாம் கரைந்துபோகும்
நாளும் வராதா?

என்றாவது ஓர் அந்தியில்
ஒரு நல்முத்து க்ண்டு
நம் வாழ்வும் மலர்ந்திடாதா?

கூலித் தொழில் முடிந்து
எங்களுக்குத் தின்பண்டம் சுமந்துவரும்
மதிய உணவுத் தூக்குச்சட்டிக்குள்
முத்துச் சிப்பிகள் சிலவற்றை
வாங்கி வந்தார் எம் தந்தை.

கடலுக்குள் இருப்பவை போலவே
அமைதியும் வியப்புமாய்
திறந்து திறந்து வாய் மூடிக்கொண்டிருக்கும்
சிப்பிகள்.
உருண்டு திரண்டு பெரிதாய் ஒளிவீசும்
முத்து எனில்
அறுத்து அலசிப் பார்ப்பதற்கு முன்னேயே
வாய்திறந்து நிற்கும் சிப்பி
தானாகவே காட்டிவிடும்.

”அப்பா, இதோ இந்தச் சிப்பிக்குள்
ஒரு பெரிய முத்து” என்றேன், உரக்க;
மகிழ்ச்சியின் உச்சியில் மனம் பூரித்த அப்பா,
மறுகணமே, ”ஆனால் அது சப்பட்டை”
என்ற என் குரல்கேட்டு
ஓங்கி என் மண்டையில் ஒரு குட்டையும்
வெறுப்பையும் தன் வேதனையும்
கொட்டினாரோ?

தந்தையே என்னை மன்னியுங்கள்
நாம் கண்ட உண்மை
அப்படித்தானே இருக்கிறது இன்றும்?

கவலைப்படாதீர்கள் தந்தையே
உங்கள் தயரத்தின்முன்
என் வலி ஒன்றும் பெரிதில்லை.

Comments are closed.