38 காய்கறிச் சந்தை

வாசல் விட்டிறங்கி
இரண்டு எட்டு கிழக்கே நடந்தால்
காய்கறிச் சந்தை! அவ்வளவு பக்கம்!
நாம் எதற்கு வாசல்தோறும் வந்து கூவும்
கூடைக்காரிகளைச் சார்ந்திருக்க வேண்டும்?

எத்தகைய செல்வம் இது!
இத்துணை பசுமையும் தூய்மையுமான
காட்சி வேறுண்டோ உலகில்?
காலையில் இவை முகத்தில்
முழிப்பதுதான் எத்தனை இன்பம்!

வெறுமே வாய்க்கும் வயிற்றுக்குமாய்
உண்பதற்கு மட்டுமே எனில்
இத்தனை வண்ணங்களில் இயற்கை ஏன்
இவற்றைப் படைத்திருக்க வேண்டும்?
நம்மைக் கொஞ்சி மகிழப் பீரிய
பித்துவெறிவேகத்தின்
பிரியப் பிதற்றல்கள்தாமோ இவ்வண்ணங்கள்?

அங்கு சென்றுவரும்போதெல்லாம்
காதலால் தீண்டப்பட்டவன்போல்
நான் வருவதை என் துணைவி பார்க்கிறார்
ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்தப்போவதுபோல்
காய்கறிப் பையைத் தலைகீழாய்க்
கூடம் நடுவே கொட்டுவேன்
ஆ! எத்தனை அழகு ஓவியம்!
என் மனைவிக்கு அந்த வேலையை
விட்டுக் கொடுத்துவிடாமல்
ஒவ்வொன்றையும்
பிரியம் பிரியமாய் நானே பிரிப்பேன்.
சமையலறை மேஜைமேல் ஒரு பாத்திரத்தில்
பூக்குவளை மலர்கள்போல் அமைத்து
அவற்றைப் பார்த்துப் பார்த்து நெகிழ்ந்தபின்தான்
பதனப் பெட்டிக்குள் பத்திரப்படுத்துவேன்

சோயாபீன்ஸை உரித்து உரித்து
பருப்புகளைக் கைகளில் அள்ளி
அந்த மெஜந்தா விழிகளைப்
பாத்துக்கொண்டிருப்பதற்காகவே
நான் வாழ்வேனே இப்பூமியில் பல்லாண்டு காலம்!

Comments are closed.