44 காதலிக்கு

விவாஹம் கொள்ளாமல் விவாகரத்தும் செய்துள்ளோம்
உன் அலுவலகம் நோக்கி நீ
என் அலுவலகம் நோக்கி நான்
செல்லும் வழியில் நாம் புன்னகைத்துக் கொள்கிறோம்

’குட்மானிங்’ – நாம் பரிமாறிக்கொள்ளும் ஒரே ஒரு வார்த்தை
ஒரு சிலநாள் ஒருவரை ஒருவர் காணவில்லையெனில்
ஊகித்துக்கொள்கிறோம். என்றாவது ஒரு நாள்தான்
அதன் சுக-துக்கம் குறித்து
சிக்கனமான சில வார்த்தைகளில் பேசிக்கொள்கிறோம்

ஒவ்வொரு நாளும் உன்னைக் காணுகிற உற்சாகத்தில்தான்
காலைப் பொழுதில் மலரும் என் புத்துணர்வு
தளர்வுறாமல் தொடர்கிறது

இன்று ஆபீஸுக்கு லீவு போட்டு விட்டேன்
படுக்கையிலிருக்கிறேன்
நீ வீதியில் வராத சில நாட்களில்
எனக்கு நிகழ்வது போலவே
உனக்கும் ஒரு வெறுமை தோன்றும் இன்று
மீண்டும் நாம் சந்தித்தபடி ஒருவரையொருவர்
சிரமமின்றிக் கடந்து செல்வோம்
ஆனால் வாரம் ஒன்றாகிவிட்டது
உடல் தேறவில்லை
மருத்துவ விடுப்பும் கொடுத்துவிட்டேன்
இப்போது உடல் … மிக மோசமாகத்தான் ஆகிவிட்டது
தொடர்ந்து என்னைக் காணாதது கண்டு
நீ கலவரமாட்டாய்

இன்று என் ஸ்வவ்வை நானே பற்ற வைப்பது
இயலாது போகிறது
உன் கைகள் கிடைத்தால் தேவலாம் போலிருக்கிறது
என் முனகல் கேட்டு வந்தன அக்கம்பக்கத்துக் கைகள்
நான் மரிக்கும்போது
இந்தக் கைகளுக்குள்ள முகங்கள் துக்கிக்கும்;
நீ அழவும்
மரித்த பொருள், என்று உனக்குச் சொந்தமென்று இருந்தது?
என்றாலும், கவனி:
நான் உன் பாதையை அலங்கரித்திருக்கிறேன் –
உன் தலையிலிருக்கும் ஒரு ரோஜாவைப் போல

இந்தப் பத்து வருடங்களில்
தொலைந்துபோன ரேஷன் கார்டுக்காக;
பொருள்கள் களவு போன ஒரு நாள்
அதைப் போலீஸில் எழுதி வைக்க வேண்டி; என்று
இரண்டே இரண்டு முறைதான்
நான் உனக்குத் தேவைப்பட்டிருக்கிறேன்

நான், கொத்தமல்லித் துவையலுக்கும்
பித்தான் அறுந்து குண்டூசி மாட்டியிருக்கும்
என் சட்டைக்குமாக
உன்னை அணுக முடியுமா?

ஒரு விடுமுறை நாளில் நீ சமைக்கையில்
அல்லது
உன் சீதா மரத்தில் கனிகள் பறிக்கையில்
என் ஞாபகம் உனக்கு வந்திருக்கும்
அதற்காக, மறுநாள் பார்க்கையில்
அந்தக் கனிகளுடன் என்னை நீ நெருங்கவில்லை
என் மிகச்சிறிய தோட்டத்து ரோஜாப்புதரில்
அபூர்வச் சிரிப்புடன் என்னை வியக்க வைக்கும்
ரோஜாவைப் பார்க்கையில் எனக்கு உன் ஞாபகம் வரும்
அவரவர் ரோஜாவை அவரவர்தான்
பறித்துக் கொள்ள வேண்டுமென்ற நியதி
அன்று அதைப் பறித்துக்கொண்டு உன்னை அணுகும்
அற்பச் செயலில் என்னை ஈடுபடுத்தாது தடுக்கும்.
இந்த அனுபவத்திலிருந்துதான்
நானும் உன்னைப் புரிந்து கொள்கிறேன்
உன் படுக்கையில் நீ என் துணையை வேட்கிற
ஒரு இரவை நீ கண்டிருக்கலாம் எனினும்
காலையில் அந்த நோக்கத்துடன் நீ
என்னிடம் என்றும் புன்னகைப்பதில்லை
நான் அறிவேன் ஜானகி, உன் புன்னகை
நூற்றுக்கு நூறு அஸெக்சுவலானது;
உயிரின் ஆனந்தத்தைப் பிரதிபலிப்பது;
தெருப் பொறுக்கிகளால் இனம் காண முடியாதது;
மலினப்படுத்த முடியாதது

License

காதலிக்கு Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.