74 கவிதைவெளி

கவிதை எழுப்பித்தானே
காலையில் நான் துயில் களைந்தேன்
கவிதையின் நீரில் தானே
முகம் கழுவினேன்

கவிதையின் தூரிகை கொண்டல்லவா
வீட்டினை நான் தூய்மையும் ஒழுங்கும் செய்தேன்
கவிதையின் படகிலேறியன்றோ
அண்டை வீட்டார்களுடனும் அந்நியர்களுடனும்
உறவு கொண்டேன்

கவிதையின் நெருப்பினிலன்றோ
சோறு வடித்தேன்
கவிதையின் அரிவாள்மனை அமர்ந்தல்லவா
காய்கறிகள் நறுக்கினேன்
கவிதையின் வாகனத்திலேறித்தானே
அலுவலகம் சென்றேன்

கவிதையின் கிண்ணத்திலன்றோ
தேநீர் பருகினேன்
கவிதையின் ஒளியிலல்லவா
தகதகத்துக் கொண்டிருந்தது இயற்கை
கவிதையின் பொன்வெளியிலல்லவா
நாளும் என் சிறுஉலா நடந்தது

கவிதையின் மொட்டைமாடியிலன்றோ
வான் பார்த்து நின்றேன் நான்
கவிதையின் நாற்காலிகளிலமர்ந்து கொண்டல்லவா
பிரச்னைகளை நாங்கள் ஆராய்ந்தோம்
மூடத்துயர் மிகுந்துகொண்டே வரும் இவ்வுலகில்
மனித முயற்சிகளனைத்தும் வீணேயாகிக் கொண்டிருக்கும்
இச்சாம்பல் வானத்தின் கீழே
வாழ்வின் அரும்பொருள் வினை இதுவே என
எப்போதும் உணர்த்தும் நிலையில்தானே
எரிந்துகொண்டிருந்தது அங்கே
கவிதைவெளி!

Comments are closed.