72 இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி

வண்டி புறப்படவும்
தனியே விட்டுவிட்டு
மகிழ்ச்சியுடனே
விடைபெற்றுச் சென்றனர் தோழிகள்

மேனியெங்கும்
மணப்பெண் போலொரு நாணத்தின் நறுமணம்
மணமகன் விழித்துக் காத்திருக்கும்
முதலிரவு அறையோ இத்தனிமை என ஒரு விகாசம்
சிலுவை மிளிரும் வெள்ளுடையையும்
தொண்டிதயம் ஒளிரும் என் கன்னிமையையும்
என் நேசரிடம் ஒப்படைக்கப்போவதுபோல் நிற்கிறேன்

வண்டி குரலெடுத்த ஓங்காரத்தில்
புறப்பட்டு ஓடத் தொடங்கிய இரும்பு ராகத்தில்
ஜன்னல் வழி வந்துகொண்டேயிருக்கும்
நிலக்காட்சிகளின் கொள்ளை ஒளியழகில்
வேகமாய் வந்து தழுவும் காற்றில்
சக பயணிகளின் மத்தியில்

என் நேசருடனல்லவா நான் கலந்திருந்தேன்

License

தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.