51 அகழி

 1. உச்சிப்பொழுது­

வீட்டுக் கட்டடத்தின் அழகிய தோற்றத்தை மறைக்கிறது என

வெட்டப்பட்டன மரங்கள்

‘வேர்கள் சுவர்களைப் பெயர்த்துவிடும்!’

‘கடையின் விளம்பரப் பலகையை மறைக்கிறது’

‘குப்பைகளைக் கொட்டுகிறது’

‘மாட்டுக்கு லாடம் அடிக்கிறவன், தெரு வியாபாரி என்று

‘கண்டபயல்களும்’ ஒண்டுகின்றனர்!’

வெட்டப்பட்டன மரங்கள்

 

தொடர்ந்து திருட்டுப் போனதைத் தொடர்ந்து

‘திருடர்களுக்குத் தோதாய் இருந்ததாய்’ எனக் குற்றஞ்சாட்டி

வெட்டி வீழ்த்தி விட்டார்கள் வீதியோர மரங்கள் அனைத்தையும்

இன்னும் உயரமாய் எழுப்பப்பட்டன காம்பவுண்டுச் சுவர்கள்

கத்திகத்தியாய் ஊன்றப்பட்ட பீங்கான்கள் அந்த முண்டத்தின் மீது

அதிலே இரத்தம் ஒழுகக் கழுவேறிக்கிடந்தன நட்சத்ரங்கள்!

 

நெடுஞ்சுவர் கால் நீட்டும் சாண் நிழலில் ஒண்டும் பாதங்கள்!

நிலத்திலிருந்தும் சுவர்களிலிருந்தும் அனல்கின்றன ஆட்சேபக் குரல்கள்!

 

மதில்சுவர்கள் நெகிழ்ந்து நிழல்கள் வீசக் காத்திருக்கின்றன

மனம் பொறுக்காத கடல் தாயின் காருண்யம்

நிலத்தை நோக்கி வீசும் காற்றில்!

 

ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் மதில்கள்

மதில்களைச் சுற்றி அகழிகள் வெட்டும் வேலைகள் துவங்கிவிட்டன

 

கழுத்தைக் கட்டிக்கொண்டு அலைந்த

காவல்துறை – களவாணிக் கூட்டத்தினர் கண்களில்

செய்வதறியாத திகைப்பு!

“போங்களேன் அங்கே, அகழி வெட்டுகிற வேலைக்கு

ஆள் நிறையத் தேவையிருக்கும் போலிருக்கே.

அடுப்பிலே பூனை தூங்குது” என்றனர் மிஸஸ் களவாணிகள்

“மேல்வரும்படி இல்லாததால் ஜாலியாய் இல்லை

போங்களேன் அங்கே பார்ட் டயமாய்

அகழி வெட்டுகிற வேலைக்கு” என்றனர் மிஸஸ் காவல்துறையினர்.

பிற்காலத்தில், காவல்துறையே கலைக்கப்படலாம் என

தீர்க்கதரிசனம் கூறினர் அரசியல் பொருளியல் வல்லுநர்கள்

 

அகழிப்பாலம் கடந்து வருவோரைப் பரிசோதிக்க

நம்பிக்கையான காவல் வீரர்களுக்கும்,

அதிநவீனமான ஆயுதங்களுக்கும் ஏகக் கிராக்கி

தினசரிகளில் ‘தேவை’ பகுதிகளில் எல்லாம் இதே கூக்குரல்

 

இன்று அகழி முதலைகள் சாப்பிடுகின்றன,

காவல்துறைக்குச் செலவாகும் தொகையைவிட

ஐம்பது மடங்கு அதிகமான தொகையை

 

 1. முதலைகள்

அகழி முதலைகளுக்கு ஆகாரம் வேண்டும்

அகழிக்குள் இருக்க நீர் வேண்டும்

வேறென்ன வேண்டும்?

போலீஸ்காரர்களுக்கோ காவல் வீரர்களுக்கோ

போனஸ் வேண்டியிருக்கிறது

பொண்டாட்டி வேண்டியிருக்கிறது

அதைத் தொடர்ந்து இன்னும்

என்னவெல்லாமோ வேண்டியிருக்கிறது!

 

முதலைகளுக்கு என்ன ஜோலி?

தங்களது பூத உருவத்தாலும்

கொடூரப் பற்களாலும் முழியாலும்

அடிக்கடி தண்ணீருக்குமேல்

ஒரு கொழுத்த சவுக்கைப்போல் நெளிந்து

பயங்காட்டிக் கொண்டிருக்க வேண்டியது.

அவ்வளவுதான். இவர்களோ

தங்கள் ஜோலியில் நேர்மை தவறுகிறார்கள்;

மனிதர்களாக வேறு இருந்து தொலைகிறார்கள்!

 

எப்போதோ கண்ட நர மாமிச ருசியை

அவற்றில் விழிகள் யாசித்துக் கனல்கின்றன.

தானிய உணவுகள் அதன் ஜீரண உறுப்புகளுக்கு

ரசிக்கவில்லை

ஆடு மாடு கோழி ஆகிய அப்பிராணிப் பிராணிகள்

அவற்றுக்காகவே வளர்க்கப்பட்டன

எனினும் எப்போதோ கண்ட நரமாமிசருசியை

அவற்றின் விழிகள் யாசித்துக் கனல்கின்றன

 

அகழியைவிட்டு வெளியேற முடியாது

அழுந்தப் போட்டுவிட்டார்கள் பாவிகள்!

புல்தரையில் வந்து உட்காரும் வயோதிகர்கள்;

பூச்செடிகள் பக்கம் தளர் நடை போடும் குழந்தைகள்;

புதர்கள் பக்கம் ஒதுங்கி அமரும் காதலர்கள்;

நாவிலே எச்சிலூற வைக்கிறார்கள்

 

திருடர்கள் அகழிக்குள் விழுந்து

இரையாவதற்கு குருடர்களா அவர்கள்? அல்லது

தற்கொலைப் படைகளா?

சும்மா பயங்காட்டிக் கொண்டேயிருக்கத்தானா

நாங்கள்?

 

தண்ணீருக்குள்ளேயேயிருந்து அலுத்துப்போகுது

கரையேற வேண்டும்;

அங்குள்ள காற்றைச் சுவாசிக்க வேண்டும்

 

 1. காவல் வீரர்கள்

“ஜூன் 27 முதல் காவல்துறை கலைக்கப்படுகிறது. வேலையிழந்த காவல்துறையினர் அனைவரும் அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் தனியார்களிடம் காவல் வீரர்களாக எடுத்துக்கொள்ளப்படுவர்கள்…”

 

அகழியை ஒட்டி இன்னொரு பாதுகாப்பு வளையம்.

அகழி முதலைகளின் விருப்பம்

கரையோர காவல்வீரர்களின் மூச்சில் நிறைவேறுகிறது.

காவல் வீரர்களே! காவல் வீரர்களே!

உங்கள் விருப்பம் என்ன?

எப்போதும் தயார் நிலையில் இருக்கும் உங்கள் ஆயுதங்கள்

என்ன கூறுகின்றன?

 

உங்களையே உற்று நோக்கிக்கொண்டிருக்கின்றன

அகழி முதலைகள்!

அவற்றுக்கு நீங்கள் இரையாக மாட்டீர்களா?

நர பிணங்கள் எத்தனை விழுந்தும்

நர மாமிச ஆசை தணியவில்லை.

உயிருள்ள நர மாமிசமல்லவா வேண்டும்!

இதோ இந்த ‘அமைதி’ தடுமாறி ஒரு நாள் நீ

உன் துப்பாக்கியைச் சுடக் கூடுமா?

அல்லது

உன்னை நீயே சுட்டுக்கொள்வாயா?

 

 1. பறவைகள்

காணாமற்போன பறவைகளைத் தேடி

கானகத்திற்குப் போய்விட்டார்கள் கவிஞர்கள்!

சிலர் மட்டும்

நதிக்கரை மற்றும் நீர்நிலைகளில்!

அங்கே பறவைகள் வந்துபோகும்

ஆயுதபாணி மனிதர்கள்

குறிபார்த்துச் சுடும் – வீராதி வீர சூர பராக்கிரமத்

திறமையை வளர்க்கவும் பரிசோதிக்கவும்

வெற்றிக் களிப்படையவும் வருவர்!

 

எதிரிகள் திருத்தும்வரை

தங்கள் உயிர்களை

விடாது பலி கொடுக்கத் துணிந்த

சத்யாக்ரஹிகளாய்

ஓயாது வந்துகொண்டேயிருக்கின்றன பறவைகள்!

 

ஒரு ஆகாசப் பார்வையில்

இம்மனிதக் குடியிருப்புகளின் சிறுமைத் தோற்றம்

கண்டு அலட்சியமாய் ஒதுங்கி

தன் வியன் சிறகசைத்து

வெளியில் உலா வந்த பறவை;

பூமியில் காலூன்றியபோது

உண்மையை

உருப்பெருக்கிக் கருவியில் கண்டதுவாய்

அதிர்ந்தது!

குண்டடிபட்டுத் துடித்து விழுந்தது!

இந்த மனிதன்

ஏன் இப்படிப்

பறவைகளைச் சுடுகின்றனர்?

எவரும் தாண்டமுடியாத

அகழிகளைத் தாண்டி

ஆயுதம் தாங்கிய

வீரர்களைத் தாண்டி

ஒரு பெரும் ராக்ஷஸனின்

ஓராயிரம் கொடூரப் பற்களைப் போல்

கத்தி கத்தியாய் பீங்கான் பதிக்கப்பட்ட

மதில் முண்டகங்களின் உச்சிகளையும் தாண்டி

இப் பறவைகள்

ஹாய்யாகப் பறந்து செல்வதைத்

தாங்கிக் கொள்ள முடியாத

கடுப்பில்தானே சுடுகின்றனர்?

o

பறவைகளே!

மரங்கள் மரங்கள் என

நீங்கள் சதா ஜெபிப்பதென்ன?

பழங்களை உண்டு

ரகசியமற்று

விதைகளைச் சுமந்து வந்து

கடும் பாதுகாப்பு மிகுந்த இந்த நகரில்

சுதந்திரமாய் எச்சமிட்டும் எச்சமிட்டும்

எட்டாதே இருக்கிறதென்ன உங்கள் இலட்சியம்?

 

உங்கள் பிரிய நண்பன்

காட்டுக் கவிஞன்

அவனது காட்டுமிரண்டிக் குணங்களுக்காக

அழிக்கப்படுதலும் ஒடுக்கப்படுதலும் நியாயந்தானே?

நதிக்கரை பாலீதீன் பைகளில்

மரக்கன்றுகளை வளர்த்துக்கொண்டு

காடுகளில் அழிக்கப்பட்ட இடங்களை

நிரப்பிக்கொண்டிருக்கிற கவிஞனின்

அடக்கமற்ற அதிகப்பிரசங்கித்தனம்

ஆத்திரத்தை உண்டாக்குவதும், அவன்

கொடுந்தண்டனைக்கு ஆளாவதும்

நியாயந்தானே?

வீட்டுக்கூரைகளில் கூடு கட்டித் திரியும்

சிட்டுக்குருவிகளை நாம் சுட்டுத் தள்ளுவதில்லை!

ஏன்?

அவற்றுக்கு நமது முருங்கை மரம் போதும்;

இந்தக் கான்கிரிட் நகரத்து வானம் போதும்.

காக்கைகளுக்குக் காடு எதற்கு?

மனிதர்கள் காறி உமிழ்ந்த எச்சில்களே அமிர்தம்!

ஆன்டெனாக்களும் தொழிற்சாலைக் கூரைகளும்

ஆலயச் சிலுவைகளும் போதுமே!

மழைக்காலம் தரும் மயக்கத்தில்

மரங்களடர்ந்த கானகத்துள்ளிருந்து வந்த புள்ளிக்குயிலை,

‘மனித நேயமற்ற காட்டுப்பறவை’யைக்

குதறித் தள்ளக் காகங்கள் விரட்டுவது

நியாயந்தானே?

 

 1. நதிக்கரையோரம் கவிஞன்

(அவன் கவிதைகளிலிருந்து சில)

சுவர் ஏறிக் குதித்து

முடமான கால்களோடும்

சாக்கடைகளில் புரண்டு வந்த

நாற்றத்தோடும்

காற்றே, உன்னைக் காணச் சகிக்கமால்தான்

மாடி மீது வந்து நிற்கிறேன்;

யாரும் என்னை அண்ணாந்து பார்ப்பதற்காக அல்ல.

காட்டுக்கு ஓடுகிறேன்;

யாரையும் விட்டு ஒதுங்குவதற்காக அல்ல.

நதிக்கரைக்கு ஓடுகிறேன்;

படகிலேறி அக்கரை சென்றுவிடுவதற்கல்ல

o

“நிலாவைக் கண்டு

மயங்கி நிற்கும் நதியே!

அந்த நிலாவே

உன்னிடம் விழுந்து

தத்தளிப்பதைப் பார்!”

இல்லை,

தன் நெஞ்சில்

அந்த நிலா துடிப்பதை உணர்ந்த

பேதை ஆறு

மேதை ஆறாகிறது

o

ஏகாந்த இரவின் அமைதியிலே

நிலாவொளியில் மயங்கி நிற்குது ஆறு.

கடிகாரம் இல்லை.

உன் கைவளைகளும் ஏன் ஒலிசெய்ய விரும்பவில்லையா?

பெண்ணே! இளம் பெண்ணே!

உனக்கு துஷ்டர் பயமேயில்லையா?

தூண்டில் வீசிப் பார்த்துக்கொண்டிருக்கும்

விநோத வேட்டைக்காரியே!

அப்படியென்றால்

நீ மீன் பிடிக்க வரவில்லையா?

o

இந்த நதிநீரை

ஒரு கான்க்ரீட் கட்டிடத்தின்

மாடியறை ஒன்றிலிருந்து பருகுகிறாய்.

உன் விதி அது.

ஆனால்,

இந் நதிக்கரையிலேயே தியானித்துக்கொண்டிருக்கிற

கூழாங்கற்களை அள்ளி வந்து

உன் கட்டிடத்தின் முகப்பை அலங்கரிக்கப் பதிக்கிறாயே

அதைத்தான் சகிக்கமுடியவில்லை

 

மலைகளினின்று உருளும் நதி

பாறைகளை உருட்டி உருட்டி உருவாக்கிய

கூழாங்கற் குண்டுகள்!

எந்த பீரங்கிகளை வைத்து

விருட்சங்கள் அரவணைக்காத

இந்தக் கான்க்ரீட் காடுகளின் கொடுமையை அழிப்பது?

 

மலையுச்சியிலிருந்து

பண்பட்ட ஒரு பாறை –

இயங்கினால்

கீழேயுள்ள நகரத்தை அழித்துவிடக்கூடிய அளவு பெரிசு –

உருளத் தொடங்கியது…

விருட்சங்கள் வழிமறித்து, மறித்து, மறித்து

சீற்றம் தணிந்து அது அமர்ந்தது தவத்தில்!

 

இதோ, நமது நகரை நோக்கியும்

அதே போலொரு பாறை உருளுவது காண்கிறேன்

வழிமறிக்க ஒரு விருட்சமுமில்லை!

o

 1. நுனிக்கொம்பிலிருந்துகொண்டு

அடிமரத்தை வெட்டும் படலம்

 

நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பிலிருக்கும் நாம்

காட்டுமிராண்டிகளா என்ன?

காடுகளை வெட்டி வீடுகளைக் கட்டுவோம்!

அட! இவன் ஏன் இப்படித் துடிக்கிறான்?

ஆ! இந்தக் காட்டுமிராண்டிக் கவிஞனின் உடலெல்லாம்

வெட்டுக்காயங்கள் எப்படி வந்தன?

கொண்டுபோங்கள் இவனை நம் மருத்துவமனைக்கு

 

கோபத்தால் வானம் பொழிய மறுக்கிறதாமா?

நம் விஞ்ஞானம் எதற்கு இருக்கிறது?

செயற்கை மழை பெய்யச் செய்வோம்!

கடல்நீரைக் குடிநீராக்குவோம்!

வெப்பநிலை உயர்வா?

நம் கான்க்ரீட் அறைகளை எல்லாம்

ஏ ஸி செய்துவிட்டால் போச்சு!

 

சூர்யன் புணரும் மலட்டுக் கட்டடங்கள்

‘மரங்களைக் காட்டிலும் உயர்ந்த’

அடுக்குமாடிக் கட்டடங்கள்

கக்கும் அனலை மின்விசிறிகள் விரட்டித் தோற்க,

மூளை சோர்ந்தாலும்

அடிக்கடி டீ குடித்துக்கொண்டு

சோர்வின்றி பணியாற்றும்

 

விடுமுறை நாளெனில்

டீ விடுத்து, தூங்கி

புத்துணர்ச்சியோடு எழுவோம்,

மாலை 5 – 45க்கு டிவியில் காணும் சினிமாவுக்காக:

காதலர்கள் தழுவியபடி பாடி ஆடிக்கொண்டு செல்லும்

இயற்கை அழகு கொஞ்சும் (கலர் டிவியில்)

அற்புத ஸ்தலங்கள் காண்போம்

o

கானகத்தில்

மரநிழல்களின் கிழிசல்களைத் தைத்துக்கொண்டிருக்குது காலம்

காலத்தின் மீதமர்ந்து பவனிவரும் சோம்பேறிக் கவிஞனே

இங்கே வா!

நடைபாதையில் நட்ட குடைநிழல்களில் அமர்ந்து

எல்லோரையும் போல்

குடை ரிப்பேர் செருப்புத் தைத்தலில் ஈடுபட்டால் என்னவாம்!

மரம் அறுக்கும் நிலையத்தை நோக்கி

வெட்டப்பட்ட மரங்களை அடுக்கிக்கொண்டு செல்கிறது வண்டி

வந்து இந்த வேலையைக் கவனி

குடையும் செருப்பும் குளிர் கண்ணாடியும் அணிந்துகொண்டு

விரைந்து செல் அந்த வண்டியின் பின்னால்!

 

பண்டு

காடுகளில் பதுங்கி வாழ்ந்த கொள்ளைக்காரர்கள்

இன்றைய அரசியலையே நிர்ணயிக்கவல்ல

பெருந்தனக்காரர்களாய் பெருநகர்களுக்கு வந்துவிட்ட பிறகு

காடுகள் எதற்கு?

வெட்டித் தள்ளுங்கள்!

 

 1. மேட்டுக்குடி மகாத்மியம்

`பெரிய வீட்டுப் பெண் இவள் – அதனால்

உயர் குடும்பத்துப் பெண்!

‘இதுவரை எங்கள் மகளுக்கு

எங்கள் முற்றம் கூடத் தெரியாது’

பெருமை பேசினார் தந்தை – சம்பந்தி ஆகப் போகிறவரிடம்

 

பெண் நல்ல நிறம்; நல்ல தளதளப்பு, கொள்ளை நகை,

மாருதி கார், வீடு, பணம், செல்வாக்குள்ள குடும்பம்

வேறென்ன வேண்டுமடா மகனே?

அனைத்தையும் விட மிகமிக உயர்ந்த ஒரு அம்சம்:

சூர்யகிரணங்களால் கூடத் தொடப்படாத கன்னி!

 

வீதியில் அலைவோர் – பிச்சைக்காரர்கள்!

வீதியில் நிற்போர் – நிராதரவானவர்கள்!

வீதியில் வருவோர் – வேலைக்காரர்களற்றோர்!

வீதியில் நடப்போர் – யஜமானர் அல்லாதார்!

வீதியில், பார்க்குகளில் அமர்வோர் – நல்ல வீடுகளில்லாதார்!

வீதியில் உழல்வோர்… இழிகுல மக்கள்!

இழிகுல மக்களால் நிறைந்து வழிகிறது வீதி

 

அந்த வீட்டுப் பெண்கள் உயர் குடும்பத்துப் பெண்கள்!

ஆதலால் அவர்கள் வெளியே வருவதேயில்லை!

கழிவறை மற்றும் டிவி, டெலிபோன், வேலைக்காரர்கள்

என எல்லா வசதிகளும் வீட்டுக்குள்ளே

சத்தியமாய் – ஒரு குறைவுமின்றி – சர்வநிச்சயமாய்

இருப்பதைப் பிறருக்கு உணர்த்திக் காட்டவும்

இந்தப் பெண்கள் வெளியே வருவதேயில்லை!

இவர் ‘வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்’

குளிர் கருப்புக் கண்ணாடி மூடிய கார்களில்

சினிமாத் திரையரங்குகளுக்குச் சென்றுவருவர்

 

மகனே, பார்!

இந்த அகழிகளின் ஆழமும் அகலமும் விஸ்தீரணமுமே

சொல்லவில்லையா?

பெரிய வீடு இது. ஆகவே உயர்ந்த குடும்பம்!

‘சரி’ என்று சொல்லடா மகனே!

o

பொருள் தேடும் சூதாட்டத்தில்

வெற்றி பெற்றோர் மேட்டுகுடியிலும்

தோல்வியுற்றோர் பள்ளக்குடியிலும்

 

‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு!’

மேட்டுக்குடியும் பள்ளக்குடியும் நாட்டிற்கழகு!

மேட்டுக்குடி இளைஞன் பள்ளக்குடிப் பெண்ணைக்

காதலிக்கலாம்; வைப்பாட்டியாக்கலாம்;

கல்யாணம்தான் பண்ணக்கூடாது.

மேட்டுக்குடிப் பெண் பள்ளக்குடி இளைஞனைக்

காதலிக்கலாம்; வைத்திருக்கலாம்;

வெளியேதான் தெரியக்கூடாது.

மேட்டுக்குடி நபரைக் காதலிக்கும்

பள்ளக்குடி ஆணோ, பெண்ணோ

யாரானாலும் திருமணத்திற்குமுன்

மேட்டுக்குடியாய் ‘ஞானஸ்நானம்’ பெற்றுக்கொண்டால்

பிரச்னை இல்லை!

 

‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகா’னாலும்

வெற்றிதானே குறி!

 

 1. மாடசாமி

ஒவ்வொரு வீடும் ‘தூய்மை செய்யப்படுவதால்’

அசுத்தமாகுமா வீதிகள்?

நீ செல்லும் கோயில் கோயில்தான் எனில்

வழியெல்லாம் இவ்வளவு சுகாதாரக்கேடு இருக்க முடியுமா?

நீ செல்லுமிடம் கலைக்கூடம் எனில்

அதன் வாயில் இவ்வளவு போதையையும் வெறியையும் காணுமா?

உன் வீடு குகைதான் எனில்

வீதிக்குப் பகையாகுமா?

 

வீதி பெருக்கும் மாடசாமி

மழைக்கும் பனிக்கும் தன் உடம்பு போன்ற

சில பொருட்களின் பாதுகாப்புக்கு மட்டுமே

வீடு தனக்கெனக் கொண்ட ஓர் அற்புத மனிதன்!

வாரியல் தூரிகையால் விடியலை வரைகிறான்!

என் விழிகள் அவன் விழிகளைச் சந்திக்க நேர்கையில்

‘குட்மானிங்’ என்பதுபோல் ஒரு புன்னகை செய்ய

என்னுள் அரும்பும் விருப்பம் தயங்குவதேன்?

தலையைச் சொரிந்துகொண்டு

கடன் கேட்க வந்துவிடுவான் என்ற பயமா?

 

 1. பள்ளக்குடி

பீதியுடன் ஒருவரையொருவர்

நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும்

குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

அதுதான் பள்ளக்குடி

 

ஒருவர் மூச்சுக்காற்றை ஒருவர் சுவாசித்துக்கொண்டு

ஒருவர் வியர்வையை மற்றவர் பூசிக்கொண்டு

ஒருவர் பற்றி ஒருவர் குசுகுசுத்துக்கொண்டு

ஆனால்,

கும்பலை மட்டும் விடவே விடாமல்…

 

மேட்டுக்குடியிலிருந்து இறங்கிவரும் சாக்கடையோடு

இந்தப் பள்ளக்குடியூடே உற்பத்தியாகிய சாக்கடையும்

நட்புணர்வோடு கைகோர்க்க

ஒன்றுபட்டது நகரம்! – பகையை

வென்றுவிட்டது நகரம்!

 

பள்ளக்குடியைச் சுற்றியும் அகழி உண்டு;

அதன் பேர் சாக்கடை

அகழிக்குள்ளே முதலைகள் உண்டு;

அதன் பேர் பன்றிகள்

சாக்கடையில் குளுமை கிடைத்துவிடுவதால்

மரங்களைத் தேடுவதில்லை பன்றிகள்

 

மரங்களை நட்டு மரங்களை வளர்த்து

மரங்களை வெட்டி மரங்களை அறுத்து

மரங்களை விற்பது என்ன வேலை?

அதுவும் சொந்த நிலத்தில் இல்லை என்றால் –

மரங்களை வெட்டாதே என்று குறுக்கீடு!

 

பன்றிகள் வளர்த்தலே நல்ல பிஸினஸ்!

மனிதனின் முதல் தேவையையல்லவா அது தீர்க்கிறது!

‘புள்ளிவிவரம்’ சொல்கிறது; இந்நகர மக்கள் அனைவருமே

பன்றிக் கறி சாப்பிடுவோர்

‘பன்றிக்கறி சைவமே’ என்பது

சமீபத்தில் ஒருவரின் ஆராய்ச்சி முடிவு

 

ஒரு கிலோ பன்றிக்கறி விலை ரூ.15.

ஒரு பன்றியின் எடை சுமார் 60 கிலோ

பன்றி ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய் தருகிறது.

எந்த மரம் உனக்கு இந்த விலையைத் தரும்?

 

 1. திருமதி ராமசாமி

மூன்று மூன்று சதுர அடி வாசல் முற்றங்கள் நீங்கலான

மற்ற எல்லா இடங்களிலும்

சாக்கடை வாய்க்காலைச் சுத்தப்படுத்தி

வீதியை அசுத்தப்படுத்திய கழிவுகள்;

வீடுகளைச் சுத்தப்படுத்தி வீதிக்கு வந்த குப்பைகள்;

’வெளிக்கு இருக்கும்’ அம்மணக் குழந்தைகள்

இத்யாதிகளால்

குறுகி நீண்டவீதி: எஸ்.எஸ்.பிள்ளை தெரு

 

டி.ஆர்.நாயுடு காம்பவுண்டு 7ம் எண் வீட்டை நோக்கி

சுவாசம் புகும் நாற்றத்தை மூக்கால் மட்டுமே வெறுத்தபடி

பூவுடன் ப்ரிஃப்கேஸ் சுமந்து வந்துகொண்டிருந்தான் ராமசாமி

அவன் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

அழகு அவள்; ஜெயப்ரதா மாதிரி இருப்பாள்.

அந்த அழகு மயக்கிலேதானே பித்தானான் ராமசாமி

கல்லூரி வாசல் கடையிலேயே காத்துக்கிடந்து

கண்ணடித்து காதல் வளர்த்து, அடி உதைகள் வாங்கிக்

கல்யாணமும் பண்ணிக்கொண்டான் அவளை

அழகு உபாசகன் அல்லவோ அவன்!

 

இந்தக் குறுகி நீண்ட சந்தில்

காணக் கிடைக்கும் ஒரே ஒரு அழகு: பெண்கள்.

பளிச்சென்று அழுக்கு நீங்கக் கூடிய பாலியஸ்டர் புடவைகள்

மயிரற்றதால் பளிங்காய் மின்னும் மேனி

எங்கும் பன்றிகள் கிளறி விளையாடும் பண்டங்கள் சூழ்ந்திருக்க

மூன்று மூன்று சதுர அடிக்கு தூத்து தெளித்துக்

கோலமிட்டுக் கொள்ளும் வாசல் முற்றங்கள்

முகம் அலம்பித் தலைசீவிப்

பொட்டு வைத்துக்கொண்ட முகங்கள்

 

 1. ராமசாமி

தெருவிளக்குகளைக் கல்லெறிந்து உடைத்து

இருளை இயற்றி வைப்பார்கள் இங்குள்ள பெண்கள்

இப்புறம் தெரு,  ஒரு திறந்தவெளிக் கழிப்பறை

(என்றாலும்

ரயிலில் போகும் யாத்ரீகர்கள் கண்களுக்கு மாத்ரம்

கால்களை மறைக்கும் சேலையால் தம் முகத்தை மறைத்து

அம்மணம் காட்டும் ‘ஞானிகள்’ இந்தப் பெண்கள்!)

 

கழிவுநீரின் திண்ணமான மேற்பரப்பெங்கும்

கொசுக்கள் தோன்றி விளையாடுகின்றன

 

அவை எனது இரத்தம் நாடும் பசியின் மர்மம்?

ஒவ்வொரு ஜீவனும் தம் தாய் மடியிலிருந்துதானே

தம் உணவைப் பெறுகின்றன!

 

இந்தக் காற்றும்

சாக்கடையைப் புணராது விலக்கி

என் சுவாசத்தை வந்தடைய

இது ஒரு மனிதப் பிரபஞ்சமாக இருந்திருக்கக் கூடாதா?

 

எனது கோபம், எனது ஆக்கம், எனது புத்தி

எதுவுமே இங்கு செல்லுபடியாகவில்லை

 

எனது வீட்டை இங்கே கட்டும்போது

‘நாய் வாலா நிமிர்த்த முடியாமல் போய்விட?’

என்றுதான் நினைத்திருந்தேன்

இன்று என் வீட்டைப் பெயர்த்து எடுத்து

என் நாடி நரம்புகள் எல்லாம் புடைத்து நடுநடுங்கக்

கனக்கும் கையோடு நிற்கிறேன்.

எங்கு கொண்டு என் வீட்டை இறக்கி வைப்பேன்?

நகரமெங்கும் அலைந்துவிட்டேன்

 

 1. காலம்

தம் கல்யாணத்திற்காகவும் கணவருக்காகவும்

கற்போடு சேர்ந்து அன்பையும்

செலவு செய்யாமலே வைத்துக்கொண்டிருக்கும்

இறுகிய முகமுடைய ‘நல்ல பெண்கள்’;

தம் குழந்தைகளுக்காக மட்டுமே என்று

அன்பையும் கருணையையும் சேமித்து வைத்திருக்கும்

‘கனம் பொருந்திய’ அம்மாக்கள்;

தம் சம்பாத்தியத்திற்காக அல்லது குடும்பத்திற்காக

திறமைகளையும் தியாகங்களையும் செலவு செய்யாது வைத்திருக்கும்

கெட்டிக்கார இளைஞர்கள்;

தம் இனத்திற்காகவும் ஜாதிக்காகவும் கட்சிக்காகவும்

மக்களை ஒன்றுதிரட்ட சதா பாடுபடும் ‘உத்தமத் தலைவர்கள்’

இவர்களால்

ஆறு, தன் இயல்பில் திரிந்து சாக்கடை

 

மனிதருக்கு மனிதர், வீட்டுக்கு வீடு, இனத்திற்கு இனம்

நாட்டிற்கு நாடு அடிக்கடி போர்

தமது மானத்தையும் வீரத்தையும் பாதுகாப்பையும்

போஷிக்கும் பயிற்சி இது

அகழி முதலைகளுக்குச் சூடான நரமாமிசங்கள் கிடைக்கும்

சுவையான காலம் இது!

o

பகை நிலத்திற்கும் நேச நிலத்திற்கும்

பாலம் அமைத்துவிட்டால்

பகை நிலம் நேச நிலமென்ற இருமையுண்டா?

 

ஒரு நிலத்தினின்று புறப்பட்ட படையின்

March Past ஒலியின் Sympathetic Vibration ல்

உடைகிறது பாலம்!

 

கடலில் வீழ்ந்து அழிந்த படையின்

சக்தி வெடித்து

நேசம் – பகை என்ற அலைகளால்

கொந்தளிக்கிறது கடல்!

மழையும்

கடலில் வந்தே பெய்துகொள்கிறது

நிலத்திற் பெய்ய வழியின்றி

‘என்னை ஏன் பெற்றாய்?’ எனத்

தாயை எகிறுபவர்களும்

யூதாஸ்களும் மற்றும்

கூட்டிக்கொடுப்பவர்களும்

 

காடுகளை வெட்டினர்

 

வெட்ட வெட்டத் தளராது

துளிர்விடுகின்றன மரங்கள்

 

கையில் கவிழ்ந்த கோடாரியோடு

நரம்புகள் புடைப்பெடுத்தபடியே நிற்க

வியர்வை வழிந்தோட

மூச்சுவாங்கி நிற்கும் மனிதன் மேல் இரங்கி,

 

பாதி வெட்டுப்பட்ட கிளை

மீதியைத் தானே முறித்துக்கொள்கிறது

 

கானகத்துள்ளே ஒரு மரம் முறிந்துவிழும் ஓசை

பாறைகளின் இதயத்தைப் பிளக்கிறது

 

விருட்சங்களின் வேர் பாய்ந்து

மலைகளினின்றும் விடுபட்டு நின்ற பாறைகள்

தம் தவம் கலைந்து கண் விழித்தன

காலம் காலமாய்த் தம்மேல் படிந்திருந்த

ஒரு கருணை மறைந்து

பாழின் வெயில்பட்டுத் திகைத்தன

 

மரம் முறிந்து விழுகையில் அந்த ஓசையை

வனப் பாதுகாப்பு இலாகாவின் காதுகளுக்கு மறைக்க

ஒரு மிருகக் கத்தலை எழுப்புகிறான் மனிதன்

மிருகங்களும் வெட்கி விலகியோடுகின்றன

அவனுக்குள்ளிருந்த மிருகம் கண்டு

o

மழைமுகில்களுக்குப் பதில் விஷமுகில்கள்

நீர்நிலைகளுக்குப் பதில் தொழிற்சாலை மூத்திரங்கள்

மரங்களுக்குப் பதில் கான்கிரீட் பந்தல்கள்

நோய்கள் வருமுன்னே தடுப்பு மருந்துகள்

இப்போது என்ன கெட்டுப்போயிற்று?

புதுயுகத்திற்கேற்ற புதுமனிதர்களாய்

மாறிவிட்டால் போதாதா?

 

“அன்பு இல்லாமல் வாழ்ந்துவிட முடியும்.

தண்ணீரின்றி முடியாதே” என்றான் ஒருத்தன்!1

தண்ணீர்தானேடா,

கடல்நீரைக் குடிநீராக்கிவிட்டால் போச்சு!

“தண்ணீர் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும்.

கவிதை இல்லாமல் முடியாதே” என்றான் ஒருத்தன்!2

அட மடயர்களா!

கடல்நீரைக் குடிநீராக்குவதுதானேடா அன்பு அல்லது கவிதை!

 

 1. வழி

தோட்டத்தை விட்டு

பாழாய்ப் போன இந்தச் சுவர்களுக்குள்ளே

எப்படி வந்தாய் வண்ணத்துப் பூச்சியே!

மொட்டைச் சுவர்களிலே

முட்டி மோதும் வண்ணத்துப் பூச்சியே!

ஓவியத்திலுள்ள மலர்களைப் பார்த்து

ஓடிவந்துவிட்டாயா?

முள்வேலிபட்டு சிறகுகளைக் கிழித்துக்கொண்டு

ஏன் இங்கு வந்தாய்?

அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சியே!

என் அன்பே!

திரும்பிப் போகும் வழி தெரியவில்லையா?

வாசனையற்ற மென்மையற்ற

தடித்தனம் கொண்ட சுவர்களைக் கண்டு பயந்துவிட்டாயா?

பயத்தில் தடுமாறி முட்டி மோதுண்டதால்

உனக்கு மூளை கலங்கிவிட்டதா?

பதறாதே; ஓடாதே; என் கையில் அகப்படு;

தோட்டத்தில் கொண்டுவிடுகிறேன்

நீ பதற; நான் பதற; நீ ஓட; நான் பிடிக்க

உன் சிறகுகள் சேதமாகிவிடுமோ என அஞ்சுகிறேன்!

பதறாதே அமைதியாகு!

நான் உன்னைப்பற்றித் தோட்டத்தில் விடுகிறேன்

அடடா! இதென்ன?

குழல் விளக்கில் போய் மோதுகிறாய்!

மடிந்து போவாய்!

கண்ணை அவிக்கிற வெளிச்சம், வெளிச்சமல்ல;

இருட்டு.

வந்துவிடு, வந்துவிடு!

தோட்டத்தில் போய் உன்னை விட்டுவிடுகிறேன்!

ஐயோ! சுவரில் நடமாடும் முதலைகள்!

வந்துவிடு! வந்துவிடு!

o

பாறைகள் மீது பாய்ந்து விழுகிறது அருவி

புதுமுளைகள் எட்டிப் பார்க்கும் மண்மீதோ

பூவாளியாய் பொழிகிறது வானம்

 

சூரியன் உமிழும் தீயிலிருந்து

தலையைப் பாதுகாக்கிறது,

விறகு சுமந்து செல்லும் கூலியின்

விறகுக் கட்டு

 

கோபுரமும் பிரஹாரமும் உயர்ந்த மதில்களுமாய்

பராமரிப்பு காணாத கோயில் ஒன்று,

விதைகள் முளைத்துப் பீரிட்ட விருட்சங்களின்

வேர்பட்டு உடைகிறது! – ஆங்கே

எழுந்தது கடவுள் தன்னின் உண்மை உரு!

 

கவிஞன் சமைக்கிறான்:

காட்டுக்குள்ளே ஒரு திறந்தவெளியில்

நேற்று இன்று நாளை எனும்

மூன்று கல் வைத்து அடுப்பு மூட்டி.

திடீரென்று மழைபொழிய,

அடுப்பு நெருப்பு அணையாமல் எரிகிறது!

சமையல் பாத்திரமே பாதுகாப்பாய் அமைய

நீர் நடுவே நெருப்பு!

 

*1. டபிள்யூ. ஹெச். ஆடன் *2. தாகூர்

License

தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.